பொதுத் துறை வங்கிகளில் அந்நிய நேரடி முதலீட்டுக்கான (FDI) உச்சவரம்பை, தற்போதுள்ள 20 சதவீதத்தில் இருந்து 49 சதவீதமாக உயர்த்த மத்திய அரசு பரிசீலித்து வருவதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியாவில் தற்போது தனியார் துறை வங்கிகளில் அந்நிய நேரடி முதலீட்டுக்கு 74 சதவீதம் வரை அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், பொதுத் துறை வங்கிகளில் இந்த வரம்பு 20 சதவீதமாக மட்டுமே உள்ளது. இதனை 49 சதவீதமாக உயர்த்தினால், பொதுத் துறை வங்கிகளில் வெளிநாட்டு முதலீட்டுக்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். தற்போது நாட்டின் 12 பொதுத் துறை வங்கிகளில், எஸ்பிஐ-யில் அதிகபட்சமாக 11.07 சதவீதமும், கனரா வங்கியில் 10.55 சதவீதமாக அந்நிய முதலீடு உள்ளன.
இதனிடையே, அந்நிய நேரடி முதலீட்டு வரம்பை உயர்த்துவது தொடர்பாக அமைச்சரவை ஒப்புதல் பெறுவதற்கான வரைவை நிதி அமைச்சகம் தயாரித்துள்ளதாகவும், இதுதொடர்பாக மற்ற அமைச்சகங்களின் கருத்துகளைக் கேட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மத்திய அரசின் இந்த முன்மொழிவுக்கு ரிசர்வ் வங்கியும் ஆதரவு தெரிவித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், பொதுத்துறை வங்கிகளில் அந்நிய முதலீட்டு வரம்பை விரைவாக உயர்த்துவது குறித்து பரிசீலிக்குமாறு ரிசர்வ் வங்கி சமீபத்தில் மத்திய அரசுக்குப் பரிந்துரைத்ததாகவும் கூறப்படுகிறது. எனினும், அந்நிய முதலீட்டு வரம்பை உயர்த்துவது தொடர்பாக நிதி அமைச்சகமோ, ரிசர்வ் வங்கியோ இதுவரை அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை.
இதனிடையே, நடப்பு நிதியாண்டின் ஜூன் காலாண்டில், இந்தியாவில் அந்நிய நேரடி முதலீட்டு வரவு 6 சதவீதம் அதிகரித்து 19.81 பில்லியன் டாலராக உள்ளது. மாநிலங்கள் வாரியாக, அந்நிய நேரடி முதலீட்டைப் பெறுவதில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. கடந்த ஜூன் காலாண்டில், தமிழகத்துக்கு 5.95 பில்லியன் டாலர் முதலீடு வந்துள்ளது. மகாராஷ்டிரா 4.22 பில்லியன் டாலருடன் இரண்டாம் இடத்திலும், டெல்லி 2.67 பில்லியன் டாலருடன் மூன்றாம் இடத்திலும் உள்ளன. கர்நாடகம் 2.11 பில்லியன் டாலரையும், குஜராத் 1.3 பில்லியன் டாலரையும் ஈர்த்துள்ளன.